×

காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

*பந்தலூரில் பரபரப்பு

பந்தலூர் : பந்தலூரில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியான பந்தலூர் இரும்புபாலம், அத்திக்குன்னா, சேரம்பாடி, அய்யன் கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி சப்பந்தோடு, கோரஞ்சால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கட்ட கொம்பன் சேரம்பாடி 8 புல்லட் என அழைக்கப்படும் 2 காட்டு யானைகள் பந்தலூர் இரும்பு பாலம் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களை விரட்டியது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வீடுகளில் புகுந்து உயிர் தப்பினர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், தேயிலைத்தோட்டங்களுக்கு கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

வனத்துறையினர் யானைகளை விரட்டி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுத்தனர். இந்த 2 யானைகளையும் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டுவதற்கு கும்கி யானைகள் உதவியுடன் வனக்குழுவினர் இரவு பகலாக கண்காணித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பகல் நேரத்தில் வனத்துக்குள் இருக்கும் யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவது வனத்துறைக்கு சவாலாக இருந்து வருகிறது. டிரோன் கேமரா வைத்து இந்த 2 யானைகளையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து ஜானகி என்பவரின் வீட்டின் பின் பக்கம் இருந்த பாக்கு மரத்தை உடைத்து சேதம் செய்தது.

அருகில் இருந்த 2 கார்களையும் உடைத்து சேதப்படுத்தியது. மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினரும் விரட்டியது. அவர்கள் அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதையடுத்து குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் கும்கி யானைகள் வைத்து விரட்ட வேண்டும். பொதுமக்களுக்கு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வனத்துறையை கண்டித்து நேற்று மதியம் பந்தலூர் பஜாரில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பந்தலூரில் இருந்து சேரம்பாடி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கும் பந்தலூரில் இருந்து நாடுகாணி, கூடலூர் பகுதிக்கும் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

மாவட்ட வன அலுவலர் நேரில் வந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இது குறித்து அறிந்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் இருந்து மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு 3 நாட்கள் அவகாசம் தர வேண்டும் எனவும் யானை இப்பகுதியில் நடமாடினால் உயரதிகாரிகளிடம் உத்தரவு பெற்று யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

The post காட்டு யானைகள் தொடர் அட்டகாசம் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Bhandalur ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...